Wednesday, July 19, 2006

வாங்க . . . போங்க. . . . .

'மச்சி, மருவாதிய குட்த்து மருவாதிய வாங்கிக்கோ' ன்னு கோயம்பேடு குப்பனும், 'ஏனுங்க இது கோயம்ப்த்தூருங்க, மர்யாதியா பேசவோணுங்க' ன்னு கொங்கு பழனிச்சாமியும் குறிப்பிடும் மரியாதைதானுங்க இன்று கேட்டு வாங்கும் நிலைக்கு வந்துள்ளது. (சென்னைவாசிகள் பலர் இன்றும் கோவை வந்திறங்கியவுடன் ஆட்டோ டிரைவரிடம் நேர்கொள்ளும் முதல் சர்ச்சை பேரத்தைப்பற்றி அல்ல - மரியாதை குறித்துதான் ! ).

தமிழன் மரியாதைக்குப் பெயர் போனவன் என்றவொரு காலம் இருந்தது. இன்று மலையேறிவிட்ட ஒரு கோலத்தைக் காண்கிறோம். வயதில் மூத்தவர்களை மதித்த மாண்பு இன்று எங்கே போனது?

பலவருடங்கள் முன் பழகிய நண்பனை அவனது பட்டணத்து வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன். சொந்த வீடு, சுற்றிலும் பலவண்ணப்பூக்களை முகிழ்த்திருக்கும் செடி கொடிகள். 'இன்னும் கிராமத்து மண்ணை இவன் மறக்கவில்லை' என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டு காலிங் பெல்லை அழுத்தினேன். ஆறு வருடம் மதிக்கத்தக்க மழலை மாறா சிறுவன் ஒருவன் வெளியே வந்தான். என் வேட்டி சட்டை உருவத்தைப் பார்து விட்டு, 'ஒனக்கு யார் வேணும் அங்கிள்?'ன்னு (ஒருமையில்) கேட்க, சிறிது நிலை குலைந்தாலும், "நீ மாதவன் பையனாப்பா? தம்பி, பேர் என்ன"என்று கேட்டு வைத்தேன். பெயரைச்சொல்லாமல் உள்ளே ஓடிப்பொனவன், 'அப்பா ஒன்னத்தான் தேடி வந்துருக்காரு' என்று (ஒருமையில்) கூறுவது கேட்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பு என்பதால் காலச்சக்கரம் பலவருடங்கள் பின்னோக்கிப்போய் மீண்டும் முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. பல நண்பர்களின் இன்றைய வாழ்க்கை நிலை, அவர்களது குடும்பச்செய்திகள் என்று பலவற்றை அசை போட்டோம். மீண்டும் இடையில் வந்த சிறுவன் 'டாடி இண்ணைக்கு பீச்சுக்கு கூட்டிட்டுப் போவியா?'ன்னு கேட்க அந்தச் சிறுவனிடம் மீண்டும் கேட்டேன் - 'தம்பி பேர் என்ன"என்று. 'எனக்குத்தம்பி கிடையாது. எம்பேர் ரமேஷ்.. ஒம்பேர் என்ன அங்கிள்?' என்ற எதிர் கேள்வியோடு என்னைப்பார்த்தான். மழலையின் எதிர்பார்ப்புக்கு அன்புடனே விடைகொடுத்தேன். ஆனால் மாதவனிடம் எந்த ஒரு சலனமும் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. குழந்தையை திருத்த முயலவும் இல்லை - என்னிடம் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

இது, இன்று பெரும்பாலான வீடுகளில் நாம் அன்றாடம் காணும் நிலை. தமிழ் மொழியிலுள்ள மரியாதைக்குரிய வார்த்தைகளை நமது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டோமா என்ற ஐயம் ஏற்படுகிறது. ரமேஷ் போன்ற சிறுவர்கள் மீது எந்த தவறும் இல்லை. அவர்களை திருத்துவதற்கான முயற்சிகளில் தயக்கம் காட்டும் பெற்றோர்கள் மீதுதான் என் கோபம். மரியாதையெல்லாம் நாகரிக உலகின் தேவையற்ற சம்பிரதாயங்கள் (unwanted protocols in modern world) எனும் புதிய கோட்பாடு மக்கள் மனதில் உதயமாகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. மரியாதை காட்டுவதால் நாம் எதை இழக்கிறோம்?

வீட்டில் வேலை செய்யும் வயதில் மூத்தவர்களை கூட 'பரமசிவம் அண்ணாச்சி, கடைக்குப்போம்போது என்னயும் கூட்டிட்டுப் போங்க'ன்னு சொன்ன காலகட்டத்திலே பிறந்தது என் தவறோ.

மனைவி கணவனை டா போட்டு பேசுவதும், இவன் அவளை டி போட்டு பேசுவதும் கடைத்தெருக்களிலும், திரையரங்குகளிலும் தினமும் நாம் கேட்கும் மற்றொரு வேதனை தரும் நிகழ்ச்சி . சமவயது உடையவர்களாய் இருந்தாலொளிய (0.1%தான்) அது கேட்பதற்கு அறிவார்ந்தோர் செயலாக இல்லை. இவர்கள் தரும் விளக்கம் அது எங்களது அன்னியோன்யத்தை காட்டுகிறது. நீயும் உன் மனைவியும் ஒருமையில் பேசிக்கொள்ளும் போது, அந்த சூழ்நிலையில் வளரும் உன் குழந்தைக்கு ஒருமை ஒன்று மட்டுமே தெரியும். மனைவி தன் வயதினும் மூத்த கணவனை வாங்க, போங்க என்று கூறுவதாலும், கணவன் மனைவியை வா போ என்றோ, வாம்மா, போம்மா என்றோ கூறுவதாலும், அந்தச் சூழலில் வளரும் குழந்தை யாரும் கற்றுக்கொடுக்காமலே, ஏன் இந்த வேறுபாடு என்று ஆரயத்தொடங்கி "அப்பா வயதில் மூத்தவர் ஆனதால அம்மா அப்படி கூப்பிடறாங்க. ஆமா, அம்மாவும் நம்மவிட வயசுல மூத்தவங்க தானே, அப்ப நாமும் அம்மாவையும் அவங்களவிட மூத்த அப்பாவையும் வாங்க, போங்கன்னுதான் சொல்லணும். ஆக பொத்தாம்பொதுவா வயசுல மூத்தவங்கள்ட்ட நாம மரியாத குடுத்துதான் பேசணும்"னு தியரி, கராலரியெல்லாம் போட்டுவிடும்.

நம் குழந்தைகளுக்கு அவர்களினும், வயதில் மூத்த குழந்தைகளை அக்கா, அண்ணன் என்று முறை சொல்லிக்கொடுத்து வளருங்கள். இது கூட்டுக்குடும்பத்தில் தானாகத்தெரிவது. நாம்தான் அந்தத்தளையை(?) அறுத்தெறிந்துவிட்டு தனி மரங்களாகிவிட்டோமே. எனவே, நாம்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
வாழையடி வாழையாய் வந்த நம் கலாச்சாரம் நம் வாரிசுகளுக்கும் சென்றடைவதில் எவருக்கேனும் தயக்கம் உண்டோ?

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் - வள்ளுவன் வாக்கு.

5 Comments:

At 10:43 PM, Blogger கார்த்திக் பிரபு said...

vaanga kootanjoru..niraya elundhungal thodarndhu eludthungal valthukkal

nanum ungalai pol pudhiyavan than ...bye

 
At 12:54 AM, Blogger G Gowtham said...

நல்ல சிந்தனை
வள்ளுவத்தில் முடித்தது எனக்குப் பிடித்தது.
திருக்குறளின் அறத்துப்பாலிலும்,பொருட்பாலிலும் காதலைக் காணும் விதமாக புதிய தொடர் ஒன்றினை அடியேனும் எழுதிவ்ருகிறேன்.
//http://gpost.blogspot.com//

 
At 12:31 PM, Blogger அபு மர்வான் said...

நன்றி கார்த்திக். புதியவனுக்கு ஊக்கமளிக்கும் புதியவருக்கு நன்றி!

நன்றி கௌதம். தங்களது புதிய தொடரை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். வாழ்த்துக்கள்.

 
At 9:32 PM, Blogger Osai Chella said...

நன்று பகர்ந்தீர் நண்பரே! keep writing!

 
At 11:22 PM, Blogger அபு மர்வான் said...

மேலும் எழுதவேண்டும்.
நிறைய எழுதவேண்டும்.
your comment gives me momentum. நன்றி.

 

Post a Comment

<< Home