Wednesday, July 19, 2006

வாங்க . . . போங்க. . . . .

'மச்சி, மருவாதிய குட்த்து மருவாதிய வாங்கிக்கோ' ன்னு கோயம்பேடு குப்பனும், 'ஏனுங்க இது கோயம்ப்த்தூருங்க, மர்யாதியா பேசவோணுங்க' ன்னு கொங்கு பழனிச்சாமியும் குறிப்பிடும் மரியாதைதானுங்க இன்று கேட்டு வாங்கும் நிலைக்கு வந்துள்ளது. (சென்னைவாசிகள் பலர் இன்றும் கோவை வந்திறங்கியவுடன் ஆட்டோ டிரைவரிடம் நேர்கொள்ளும் முதல் சர்ச்சை பேரத்தைப்பற்றி அல்ல - மரியாதை குறித்துதான் ! ).

தமிழன் மரியாதைக்குப் பெயர் போனவன் என்றவொரு காலம் இருந்தது. இன்று மலையேறிவிட்ட ஒரு கோலத்தைக் காண்கிறோம். வயதில் மூத்தவர்களை மதித்த மாண்பு இன்று எங்கே போனது?

பலவருடங்கள் முன் பழகிய நண்பனை அவனது பட்டணத்து வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன். சொந்த வீடு, சுற்றிலும் பலவண்ணப்பூக்களை முகிழ்த்திருக்கும் செடி கொடிகள். 'இன்னும் கிராமத்து மண்ணை இவன் மறக்கவில்லை' என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டு காலிங் பெல்லை அழுத்தினேன். ஆறு வருடம் மதிக்கத்தக்க மழலை மாறா சிறுவன் ஒருவன் வெளியே வந்தான். என் வேட்டி சட்டை உருவத்தைப் பார்து விட்டு, 'ஒனக்கு யார் வேணும் அங்கிள்?'ன்னு (ஒருமையில்) கேட்க, சிறிது நிலை குலைந்தாலும், "நீ மாதவன் பையனாப்பா? தம்பி, பேர் என்ன"என்று கேட்டு வைத்தேன். பெயரைச்சொல்லாமல் உள்ளே ஓடிப்பொனவன், 'அப்பா ஒன்னத்தான் தேடி வந்துருக்காரு' என்று (ஒருமையில்) கூறுவது கேட்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பு என்பதால் காலச்சக்கரம் பலவருடங்கள் பின்னோக்கிப்போய் மீண்டும் முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. பல நண்பர்களின் இன்றைய வாழ்க்கை நிலை, அவர்களது குடும்பச்செய்திகள் என்று பலவற்றை அசை போட்டோம். மீண்டும் இடையில் வந்த சிறுவன் 'டாடி இண்ணைக்கு பீச்சுக்கு கூட்டிட்டுப் போவியா?'ன்னு கேட்க அந்தச் சிறுவனிடம் மீண்டும் கேட்டேன் - 'தம்பி பேர் என்ன"என்று. 'எனக்குத்தம்பி கிடையாது. எம்பேர் ரமேஷ்.. ஒம்பேர் என்ன அங்கிள்?' என்ற எதிர் கேள்வியோடு என்னைப்பார்த்தான். மழலையின் எதிர்பார்ப்புக்கு அன்புடனே விடைகொடுத்தேன். ஆனால் மாதவனிடம் எந்த ஒரு சலனமும் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. குழந்தையை திருத்த முயலவும் இல்லை - என்னிடம் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

இது, இன்று பெரும்பாலான வீடுகளில் நாம் அன்றாடம் காணும் நிலை. தமிழ் மொழியிலுள்ள மரியாதைக்குரிய வார்த்தைகளை நமது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டோமா என்ற ஐயம் ஏற்படுகிறது. ரமேஷ் போன்ற சிறுவர்கள் மீது எந்த தவறும் இல்லை. அவர்களை திருத்துவதற்கான முயற்சிகளில் தயக்கம் காட்டும் பெற்றோர்கள் மீதுதான் என் கோபம். மரியாதையெல்லாம் நாகரிக உலகின் தேவையற்ற சம்பிரதாயங்கள் (unwanted protocols in modern world) எனும் புதிய கோட்பாடு மக்கள் மனதில் உதயமாகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. மரியாதை காட்டுவதால் நாம் எதை இழக்கிறோம்?

வீட்டில் வேலை செய்யும் வயதில் மூத்தவர்களை கூட 'பரமசிவம் அண்ணாச்சி, கடைக்குப்போம்போது என்னயும் கூட்டிட்டுப் போங்க'ன்னு சொன்ன காலகட்டத்திலே பிறந்தது என் தவறோ.

மனைவி கணவனை டா போட்டு பேசுவதும், இவன் அவளை டி போட்டு பேசுவதும் கடைத்தெருக்களிலும், திரையரங்குகளிலும் தினமும் நாம் கேட்கும் மற்றொரு வேதனை தரும் நிகழ்ச்சி . சமவயது உடையவர்களாய் இருந்தாலொளிய (0.1%தான்) அது கேட்பதற்கு அறிவார்ந்தோர் செயலாக இல்லை. இவர்கள் தரும் விளக்கம் அது எங்களது அன்னியோன்யத்தை காட்டுகிறது. நீயும் உன் மனைவியும் ஒருமையில் பேசிக்கொள்ளும் போது, அந்த சூழ்நிலையில் வளரும் உன் குழந்தைக்கு ஒருமை ஒன்று மட்டுமே தெரியும். மனைவி தன் வயதினும் மூத்த கணவனை வாங்க, போங்க என்று கூறுவதாலும், கணவன் மனைவியை வா போ என்றோ, வாம்மா, போம்மா என்றோ கூறுவதாலும், அந்தச் சூழலில் வளரும் குழந்தை யாரும் கற்றுக்கொடுக்காமலே, ஏன் இந்த வேறுபாடு என்று ஆரயத்தொடங்கி "அப்பா வயதில் மூத்தவர் ஆனதால அம்மா அப்படி கூப்பிடறாங்க. ஆமா, அம்மாவும் நம்மவிட வயசுல மூத்தவங்க தானே, அப்ப நாமும் அம்மாவையும் அவங்களவிட மூத்த அப்பாவையும் வாங்க, போங்கன்னுதான் சொல்லணும். ஆக பொத்தாம்பொதுவா வயசுல மூத்தவங்கள்ட்ட நாம மரியாத குடுத்துதான் பேசணும்"னு தியரி, கராலரியெல்லாம் போட்டுவிடும்.

நம் குழந்தைகளுக்கு அவர்களினும், வயதில் மூத்த குழந்தைகளை அக்கா, அண்ணன் என்று முறை சொல்லிக்கொடுத்து வளருங்கள். இது கூட்டுக்குடும்பத்தில் தானாகத்தெரிவது. நாம்தான் அந்தத்தளையை(?) அறுத்தெறிந்துவிட்டு தனி மரங்களாகிவிட்டோமே. எனவே, நாம்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
வாழையடி வாழையாய் வந்த நம் கலாச்சாரம் நம் வாரிசுகளுக்கும் சென்றடைவதில் எவருக்கேனும் தயக்கம் உண்டோ?

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் - வள்ளுவன் வாக்கு.

Sunday, July 16, 2006

லெபனான் மீது இஸ்ரேல் படையெடுப்பு.

சிறிய நாடான இஸ்ரேல் அதனிலும் சிறிய நாடான லெபனானை கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கிறது.

கோல்டா மேய்யரின் (1968ல் இஸ்ரேலின் பெண் பிரதமர்) "ஆறுநாட்போரில்" கைப்பற்றிய லெபனானின் பெரும்பகுதியை விட்டு 1986ல் இஸ்ரேல் வெளியேறியது. அப்போதிலிருந்து இப்போதுவரை அந்நாட்டிற்கு பேர் சொல்லும்படியான படைபலம் கிடையாது. சிரியா நாட்டின் படைதான் பாதுகாத்து வந்தது. இந்நிலையில், லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சென்றவருடம் பெய்ரூட் நகரில் வைத்து வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். இச்சம்பவத்திற்கு சிரியநாட்டின் ராணுவமே காரணம் என்று மக்கள் புரட்சி செய்ய, சிரிய ராணுவமும் லெபனானை விட்டு வெளியேறிவிடுகிறது. இன்று ஹெஸ்புல்லாஹ் (இறைவனின் கட்சி) என்ற இயக்கம்தான் தென் லெபனானை பாதுகாக்கிறது. இது அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட இயக்கம். ஆனால் இது 2005ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், 128 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 23 இடங்களைக் கைப்பற்றியது. இவர்களுக்கு சிரியா மற்றும் இரானுக்கு தொடர்பு உண்டு என்று நம்பப்படுகிறது.

ஹெஸ்புல்லாஹ் கடத்திச் சென்ற இரு ராணுவ வீரர்களை விடுவிக்கவும், அவ்வப்பொழுது வட இஸ்ரேலிய நகரங்களின் மீது பாயும் சிறிய ஏவுகணைத்தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த படையெடுப்பு தேவையென இஸ்ரேல் காரணம் கூறுகிறது. வான்வெளித்தாக்குதலால் தென்கோடியிலிருந்து வடகோடி வரைக்கும் எதிர்ப்பின்றி, குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. வலுவான வான் பாதுகாப்பு ஏற்பாடுகள்(air defence system)கூட லெபனானில் இல்லை.

ஹெஸ்புல்லாஹ் இரு இஸ்ரேலிய வீரர்களுக்கு பணயமாக இஸ்ரேலிய சிறைகளில் 25 வருடங்களுக்கும் மேலாக வாடும் எண்ணற்ற பாலஸ்தீனிய, லெபனானிய கைதிகளின் விடுதலையைக் கோருகிறது. இதுவரையிலும் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களும், 100க்கும் மேற்பட்ட (இஸ்ரேலிய, லெபனானிய) பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பன்னாட்டு அரசியல் நோக்கர்களின் பார்வையில், இப்போர் - இஸ்ரேல் அமெரிக்க துணையுடன், சிரியா மற்றும் ஈரான் நாட்டைத்தாக்கும் போருக்கான ஆயத்தம் என நம்பப்படுகிறது.

குறிப்பு:
லெபனான் மக்கள் அரபியர்கள். இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களது பெயர்களை வைத்து 'இவர் எந்த மதம்' என்று அறிவது மிகக் கடினம். எண்ணெய் வளம் கிடையாது(அதான் ஒருத்தரும் கண்டுக்கலையா?).

ஞாபகமும் மறதியும்!

ஞாபகம் என்றாலே மறதியும் கைகோத்து வருகிறது - உடன் பிறந்த சகோதரன் போல. ஒன்றை ஞாபகப்படுத்தி வைத்தால்தான் அது மறந்துவிட்டதாகக் கூறமுடியும் - ஒரு விவரத்தை தக்க சமயத்தில் ஞாபகக்கோப்பிலிருந்து (மெமொரி ஃபோல்டர்-லிருந்து) வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அதை மறந்துவிட்டதாக கூறுகிறோம்.

சிலருக்கு புள்ளிவிவரங்களோடு வாதிடும் திறமை - தனது ஞாபகக் கிடங்கிலிருத்து தோண்டியெடுத்து வீசும் இலாகவம் அவருக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம் ஆகும். அதன் வேகத்தன்மை தான் ஞாபகத்திறன் (மெமொரி பவர்) என்று அறியப்படுகிறது. மனிதனுக்கு மனிதன் இது வேறுபடுகிறது.

ஒருமணி நேரத்திற்கு முன் வீட்டில் ஓரிடத்தில் வைத்த சாவிக்கொத்தை ஒருநாள் முழுதும் தேடியிருக்கிறேன். ஆனால் 30 வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த 'பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா" பாடலை
'எங்கோ என் காலமெல்லாம் கரைந்து விட்டாலும் ஓர்
இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கையுன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான்
மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்' என ஈற்றடி வரை ஞாபகத்தில் பதிந்து வைத்திருக்கிற திறன் என்னுள்ளே பல ஆச்சர்ய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கும் அறிவியல் விற்பன்னர்கள், மூளையின் பதிவு மண்டலங்கள் பல அடுக்குகளாகப் (லேயர்ஸ்) பிரிக்கப்பட்டு, விபரங்களை பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், அடிக்கடி வெளிக்கொணரும் விவரங்கள் தூசு தட்டி மெருகேற்றப்பட்டு - அடிக்கடி உபயோகப்படுத்தும் விபரம் - என்ற முன்னுரிமை பெறுவதாகவும், அதற்குரிய அடுக்கில் அது சேமிக்கப்படுவதாகவும் அந்த விவரங்கள் நினைத்த மாத்திரத்திலேயே துள்ளி விழுவதாகவும் விளக்கம் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ, இப்பொழுதெல்லாம் மொபைல் போன் வைத்த இடம் தெரியாவிட்டால், மனிவியையோ, நண்பனையோ 'மிஸ்ட் கால்" கொடுக்கச்சொல்லி அதன் மணியோசை காதில் தேன் பாய்ச்ச ஓடி சென்று எடுக்கும்போதெல்லாம் - அட இதில் மட்டுமாவது தேடுதல் குறைந்ததே என்ற நிம்மதி . அப்பொழுதெல்லம் மற்ற ஜடப்பொருட்களுக்கெல்லாம் இப்படி ஒரு மணிகட்டினால் என்ன (சாவிக்கொத்து, டிவி / டிவிடி ரிமோட்கள், அடுப்பங்கரையில் சட்டி இடுக்கி, கேஸ் சிலிண்டர் ஸ்பேனர் போன்றவைக்கு) - அததற்கு ஒரு விசையை அழுத்தினால் 'நான் இங்கிருக்கிறேன்' என குரல் கொடுக்காதோ? என்ற நப்பாசை மனதில் இளையோடுகிறது.

இருந்தாலும் . . . .
வாழ்க்கையே ஒரு தேடல் தானே -
மறதி இல்லாவிட்டால் தேடல் இல்லை
தேடல் இல்லா வாழ்வில் சுவை இருக்குமா ? பதில் சொல்லுங்க !